Wednesday 23 April 2014

பைரவரின் சிறப்பு வடிவங்கள்



பைரவரின் சிறப்பு வடிவங்கள்

பைரவரின் சிறப்பு வடிவங்கள்: பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.

பைரவர்                       - பைரவரின் சக்தி  - வாகனம்

1. அசிதாங்க பைரவர்  -  பிராமி                - அன்னம்
2. ருரு பைரவர்            - மகேஸ்வரி          - ரிஷபம்
3. சண்ட பைரவர்         - கௌமாரி            - மயில்
4. குரோதன பைரவர்     - வைஷ்ணவி       - கருடன்
5. உன்மத்த பைரவர்      - வராகி                 - குதிரை
6. கபால பைரவர்           - இந்திராணி          - யானை
7. பீஷண பைரவர்          - சாமுண்டி            - சிம்மம் (மனித பிரேதமும் உண்டு)
8. சம்ஹார பைரவர்         - சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) - நாய்

இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை. எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார். திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சவைத்துக் கொண்டிருக்கிறது.

1 comment:

  1. வெம்பாக்கம் ஸ்ரீசொர்ணகால பைரவர் கோயில் பற்றிய தகவல் அறிய கீழ்க்கண்ட வலைத்தலைத்தை பார்க்கவும்.
    Sriswernakalapairavar.blogspot.com

    ReplyDelete

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer