Saturday 7 October 2017

சர்வ மங்களங்களும் உண்டாகும் திருவிளக்கு பூஜை

சர்வ மங்களங்களும் உண்டாகும் திருவிளக்கு பூஜை

 ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்.

சித்திரை – தான்யம் பெருகும்
வைகாசி – தனம் உண்டாகும்
ஆனி – திருமணம் கைகூடும்
ஆடி – ஆயுள் உறுதிபடும்
ஆவணி – புத்திர பாக்கியம் உண்டாகும்
புரட்டாசி – பசுக்கள் பெருகி செல்வம் பெருகும்
ஐப்பசி – பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை – மோட்சம் கிடைக்கும்
மார்கழி – ஆரோக்கியம் உண்டாகும்
தை – வாழ்வில் வெற்றி உண்டாகும்
மாசி – பாவங்கள் விலகும்
பங்குனி – தர்மம் நிலைக்கும்..



அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..

திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு:

 திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.

தேவையான பொருட்கள்:

 திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப் பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன.

பூஜைக்குத் தயாராகுதல்:

 திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும்.


  திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்கு படுத்தி வைக்கவேண்டும்.

 திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும்.

 திருவிளக்கில் எண்ணெய் விட்டு, குறைந்த பட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது.

ஓம். ஸர்வே பவந்து ஸகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்


கணபதி      வாழ்த்து:

ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்

ஓம் ஸுமுகாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விக்ன ராஜாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கணாத்யஷாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ஸர்ப்பகர்ணாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி

தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல்

 கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்போது ”ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி” என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். ”ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக”.

தேவி வாழ்த்து:

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே

கலச பூஜை:

 கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும். ”கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு”

 பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை – அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை – புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் – கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

அர்ச்சனை செய்யும் முறை:

 ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.

நிவேத்யம்:

நிவேத்யப் பொருள்களை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா

ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை நிவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
அபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹா,
உதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா
பிரம்மணே ஸ்வாஹா

தீபாராதனை:

 எல்லோரும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுக. திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும். கற்பூர தீபத்தைத் தொட்டு கண்ணிலும் தலையிலும் நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் கற்பூர தீபத்தை தொட்டுக்கொள்ள, நின்ற இடத்தில் நின்றவாறே கொடுக்க வேண்டும்.

 பிரார்த்தனை:

கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதைக் காணுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!

ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

 பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer